சாய்ந்தமருது துப்பாக்கி மோதல்: இதுவரை 3 பேர் உயிரிழப்பு?
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2019 (வெள்ளிக்கிழமை)
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரவிக்கின்றது.
இதேவேளை, சம்மாந்துறையில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், ஆயுதக் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சாய்ந்தமருது களப்புப் பகுதியில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டை – (மூன்றாம் இணைப்பு)
சாய்ந்தமருது – சவளக்கடை களப்புப் பகுதியில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஐ.எஸ். தொடர்பான ஆயுதக் குழு என சந்தேகிக்கும் குழுவுக்குமிடையில் இந்த மோதல் இடம்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் துப்பாக்கிச்சூடு – (இரண்டாம் இணைப்பு)
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த போது துப்பாக்கி பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
சம்மாந்துறையில் வெடிபொருட்களுடன் 7 பேர் கைது! – (முதலாம் இணைப்பு)
அம்பாறை – சம்மாந்துறையில் வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஐ.ஸ். அமைப்பின் கொடியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவின், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இணைந்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு அடையாளம் தெரியாத சிலரால் பெறப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 7பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.