உலகக் கோப்பை 2019 : பந்து ஸ்டம்பை முத்தமிடுகிறது; ஆனால் பெய்ல்ஸ் விழுவதில்லை - தப்பிக்கும் பேட்ஸ்மேன்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2019 (திங்கட்கிழமை)
இன்று ஆஸ்திரேலியா இந்தியா போட்டியின்போது இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். வார்னர் எதிர்கொண்ட அந்த ஓவரின் முதல் பந்தை பும்ரா வீச, அந்த பந்து ஸ்டம்பில் பட்டது ஆனால் பெய்ல்ஸ் விழவில்லை. இதனால் வார்னர் தப்பித்தார்.
லெக் ,ஸ்டம்பில் பந்துபட்டபோதும் பெய்ல்ஸ் விழாததன் காரணமாக பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
ஆனால் இதுவொன்றும் புதுமையான நிகழ்வு அல்ல. இந்த உலகக் கோப்பையில் மட்டுமே இதுவரை நடந்த 14 போட்டிகளில் ஐந்து முறை பேட்ஸ்மேன்கள் இதனால் தப்பித்துள்ளனர்.
எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இந்த பெய்ல்ஸ்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றனவா அல்லது பெய்ல்ஸ் விழுவதற்கேற்ப தேவையான 'விசை' கிடைக்காமல் போகின்றதா என பலர் ஆச்சர்யப் படுகிறார்கள்.
கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஃபின்ச் ''எல் இ டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள ஜிங்கிள் பெய்ல்ஸ்சற்று வலுவானதாக இருப்பது போல தெரிகிறது. எனவே இந்த பெய்ல்ஸை தகர்க்க கூடுதல் விசை தேவைப்படுகிறது” என்றார் .
1. இங்கிலாந்து v தென்னாபிரிக்கா
ஆட்டத்தின் 11-வது ஓவரின் ஐந்தாவது பந்தை அடில் ரஷீத் குயின்டன் டீ காக்குக்கு பந்து வீசினார்.
பந்து ஸ்டம்பில் பட்டதானால் எல்.இ.டி விளக்குகளும் லேசாக மின்னின. ஆனால் பெய்ல்ஸ் விழவில்லை. இங்கிலாந்து ஃபில்டர்கள் திகைத்து நிற்க பந்து பௌண்டரிக்குச் சென்றது. இப்போட்டியில் டீ காக் 68 ரன்கள் எடுத்தது.
2. இலங்கை v நியூசிலாந்து
கார்டிஃபில் நடந்த போட்டியில் ஆறாவது ஓவரில் நியூசிலாந்து அணியின் பௌலர் டிரென்ட் போல்ட் இலங்கையின் பேட்ஸ்மேன் கருணாரத்னேவுக்கு பந்து வீசினார்.
பந்து ஆஃப் ஸ்டம்பில் பட்டது ஆனால் பெய்ல்ஸ் நகரவில்லை. கருணாரத்னேவுக்கு அதிர்ஷ்டமடித்தது. அப்போட்டியில் கருணாரத்னே 52 ரன்கள் எடுத்தார்.
3. ஆஸ்திரேலியா v வெஸ்ட் இண்டீஸ்
மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தை ஸ்டார்க் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லுக்கு வீசினார்.
பந்து கிறிஸ் கெய்ல் பேட்டை உரசிச் சென்று விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தாக ஆஸ்திரேலியா அப்பீல் செய்ய கள நடுவர் அவுட் கொடுத்தார்.
ஆனால் பந்து கெய்ல் பேட்டில் பட வில்லை. ஆனால் ஸ்டம்பை லேசாக முத்தமிட்டுச் சென்றது. ஆனால் பெய்ல்ஸ் விழவில்லை. கெய்ல் ரிவ்யூ மூலம் தப்பித்தார்.
4. இங்கிலாந்து v வங்கதேசம்
ஆட்டத்தின் 46-வது ஓவரை இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட சைஃபுதீன் உடலில் பட்டு பந்து ஸ்டம்ப் மீது பட்டது. ஆனால பெய்ல்ஸ் நகரவே இல்லை.
இதனால் சைஃபுத்தீன் அந்த ஓவரில் தப்பித்தார்.
5. இந்தியா v ஆஸ்திரேலியா
பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் பெய்ல்ஸ் விழாததால் தப்பித்த வார்னர் அதன் பின்னர் அரை சதம் கண்டார்.