உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல குடும்பங்கள் தனித்து விடப்பட்டிருக்கின்றன. பலர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தாலும் சிலர், வேறு வேறு இடங்களில் அடைபட்டு இருப்பது பாசப் போராட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோன்றதொரு நிகழ்வு தான் தெலுங்கானாவிலும் நிகழ்ந்திருக்கிறது. தெலங்கானாவைச் சேர்ந்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கியிருந்த தனது மகனை மீட்க 3 நாட்களில் 1,400 கி.மீ பயணம் செய்து, மகனை மீட்டு வந்துள்ளார். அவரின் இச்செயல் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், பாதன் நகரைச் சேர்ந்தவர் ரஸியா பேகம் (வயது 50). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த ரஸியா பேகத்துக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ரஸியா பேகம் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
ரஸியா பேகத்தின் 17 வயதான இளைய மகன் முகமது நிஜாமுதீன் 12-ம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். லாக் டவுன் தொடங்கும் முன் தனது நெல்லூரில் இருக்கும் தனது நண்பரைப் பார்க்க நிஜாமுதீன் சென்றார். ஆனால், லாக் டவுனால் போக்குவரத்து முடங்கியதால் நண்பர் வீட்டிலேேய தங்கினார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கியிருக்கும் தனது மகன் நிஜாமுதீனை அழைத்து வர ரஸியா பேகம் முடிவு செய்தார். லாக் டவுன் காரணமாக எந்த காரும் வராததால், தன்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே மகனை அழைத்து வர முடிவு செய்தார்.
இதுகுறித்து போதன் நகர காவல் இணை ஆணையர் ஜெய்பால் ரெட்டியிடம் தனக்கு உதவும்படி ரஸியா பேகம் தெரிவித்தார். ரஸியா பேகம் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் ஒரு கடிதம் எழுதி வழியில் போலீஸார் பாதுகாப்பாக அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ரஸியா பேகம், திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்டு 700 கி.மீ. பயணித்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் நெல்லூர் சென்றடைந்தார். லாக் டவுனில் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் போலீஸார் ரஸியா பேகத்தை நிறுத்திக் கேள்வி கேட்டனர்.
அப்போது காவல் இணை ஆணையர் வழங்கிய கடிதத்தை ரஸியா பேகம் காண்பித்தவுடன் அனைத்து போலீஸாரும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும், செல்லும்போது பாதுகாப்பாக இருக்க பல்வேறு அறிவுரைகளையும் ஒவ்வொரு மாவட்டத்துக்குச் செல்லும்போது உதவிக்கு போலீஸாரைத் தொடர்பு கொள்ளும் செல்போன் எண்களையும் வழங்கி வழியனுப்பி வைத்தரர்கள்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் நெல்லூர் சென்ற ரஸியா பேகம், தனது மகன் நிஜாமுதீனைப் பார்த்தபின் அவருக்கு மகிழ்ச்சி திரும்பியது. அவரை அழைத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட ரஸியா பேகம், புதன்கிழமை மாலை பதான் நகரம் வந்து சேர்ந்தார். ஏறக்குறைய தனி ஆளாக 1400 கி.மீ. பயணித்து தனது மகனை ரஸியா பேகம் மீட்டுள்ளார்.
தனது பயணம் குறித்து ரஸியா பேகம் நிருபர்களிடம் கூறுகையில், “நான் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே எனது கணவரை இழந்துவிட்டேன். எனக்கு இரு மகன்களும், ஒருமகளும் உள்ளனர். இதில் இளைய மகன் நிஜாமுதீன் லாக் டவுன் தொடங்கும் முன் நண்பரின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரைப் பார்க்க நெல்லூருக்குச் சென்றார். ஆனால், லாக் டவுனால் அங்கேயே தங்கிவிட்டார். கடந்த 15 நாட்களுக்கு மேலாக எனது மகனைப் பிரிந்திருந்தேன்.
மனது கேட்காததால், நான் காவல் இணை ஆணையரிடம் எனது நிலைமையை எடுத்துக்கூறி உதவக் கோரினேன். நான் லாக் டவுனில் பயணிக்க அனுமதியளித்து எனக்குக் கடிதம் வழங்கினார். அந்தக் கடிதம் மூலம் ஆந்திர மாநிலம் வரை சென்று மகனை அழைத்து வந்தேன். ஆந்திர மாநில போலீஸாரும் அந்தக் கடிதத்தைப் பார்த்து என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.
யாரும் இல்லாத சாலையில் ஏறக்குறைய 1400 கி.மீ. வரை 3 நாட்கள் பயணித்தாலும் நான் துணிச்சலாக இருந்தேன். அல்லாஹ் இருக்கிறார் என்று நம்பினேன்.
இரு மாநில எல்லைகளைக் கடக்கும் போதுகூட போலீஸார் கடிதத்தைப் பார்த்தபின் என்னைத் தடுக்கவில்லை. அவ்வப்போது ஓய்வு எடுத்துச் செல்லும்படி போலீஸார் அறிவுரை கூறினார்கள். என் மகனைப் பார்த்தபின் நான் இழந்திருந்த ஒட்டுமொத்த சக்தியும் எனக்குத் திரும்ப வந்துவிட்டது. அதைவிட பெரிய விஷயம் ஏதுமில்லை. எனக்கு உதவிய அனைத்து போலீஸாருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
காவல் இணை ஆணையர் ஜெய்பால் ரெட்டி நிருபருக்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில், “ என்னிடம் வந்து ரஸியா பேகம் தனது நிலையைக் கூறி உதவி கேட்டதும், துணிச்சலாகச் சென்று , மகனை அழைத்து வரத் தீர்மானமாக இருந்தது எனக்கு வியப்பளித்தது.
அவருக்கு உதவி செய்யும் வகையில் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் பேகத்தின் வருகையைத் தெரிவித்தேன். ஆந்திர போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தேன். மகனைப் பாதுகாப்பாக மீட்டு வந்தபின் கண்ணீர் மல்க ரஸியா பேகம் நன்றி தெரிவித்தார்” எனக் கூறினார்.