குச்சி வைத்துக்கொண்டு மிரட்டும் கேப்டன் அல்ல நான்: ரோஹித் சர்மாவின் வெற்றி ரகசியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2020 (புதன்கிழமை)
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பிருந்தே எங்களுடைய பணிகள் ஆரம்பித்து விடுகின்றன என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னா் ஆடிய மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
மும்பை அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மா, இறுதிச்சுற்று ஆட்டம் முடிந்த பிறகு கூறியதாவது:
வெற்றி பெறுவதை வழக்கமாக கொள்ளவேண்டும். இதை விடவும் ஒரு வெற்றியை என் அணி வீரர்களிடமிருந்து நான் எதிர்பார்க்க முடியாது. அணியின் பின்னால் இருந்து பணியாற்றுபவர்களும் இந்த வெற்றிக்கான முக்கியக் காரணங்கள். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பிருந்தே எங்களுடைய பணிகள் ஆரம்பித்து விடுகின்றன. என்ன தவறு நடைபெற்றது, எதைச் சரிப்படுத்த வேண்டும் என அலசுவோம். அணித் தலைவராக ஓர் ஆட்டத்துக்கான சரியான அணியைத் தேர்வு செய்யவேண்டும். நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஒருவரின் பின்னால் குச்சியை வைத்துக்கொண்டு மிரட்டும் கேப்டன் அல்ல நான். வீரர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதன் மூலமாகவே வேலைகளைச் செய்து முடிக்க முடியும். சூர்யகுமார் யாதவ் இருக்கும் ஃபார்மில் நான் தான் என்னுடைய விக்கெட்டைத் தியாகம் செய்திருக்க வேண்டும். சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இருவரையும் நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தால் அருமையாக விளையாடி ரன்கள் குவிப்பார்கள். வான்கடே மைதானத்தில் இந்த முறை விளையாட முடியாமல் போய்விட்டது. ரசிகர்களால் தான் எங்களுக்கு கிரிக்கெட் ஆட்டம் விசேஷமாக இருக்கும் என்றார்.