புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி வருமா? அடுத்தடுத்த திருப்பங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2021 (வியாழக்கிழமை)
புதுச்சேரியில் ஆளும் அமைச்சரவையில் அங்கம் வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அமைச்சர் மற்றும் எல்எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அ.ஜான்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
பெரும்பான்மை இழக்கும் ஆளும் கட்சி
புதுச்சேரியில் 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், ஆளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு 16 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2016இல் நடந்த சட்டப்பேரவைதேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றிருந்தது. அங்கு ஏற்கெனவே ஒரு உறுப்பினரின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி காங்கிரஸின் பலம் 10 ஆக உள்ளது. அதன் கூட்டணியில் உள்ள திமுக 3, சுயேச்சை உறுப்பினர் 1 என கூட்டினால் ஆளும் கூட்டணியின் பலம் 14 ஆக இருக்கும்.
இதே சமயம், எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக நியமன உறுப்பினர்கள் 3 பேர் என அந்த அணிக்கும் 14 உறுப்பினர்களின் பலம் உள்ளது.
இத்தகைய சூழலில்தான் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு அப்பதவிக்கு தெலங்கானா மாநில ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜனை குடியரசு தலைவர் நியமித்தார்.
இதையொட்டி புதுச்சேரியில் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அவர் பதவியேற்கும் முன்பாகவே, துணை நிலை ஆளுநரின் செயலாளரை சந்தித்த எதிர்கட்சி கூட்டணியினர், ஆளும் நாராயணசாமி அரசுபெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனக்கோரும் மனுவை புதன்கிழமை அளித்தனர்.இதைத்தொடர்ந்து தமிழிசை செளந்தர்ராஜனை அவரது மாளிகையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஜக நியமன உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்டோர் சந்தித்து, தங்களுடைய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தப்பின்னணியில், துணைநிலை ஆளுநர் பொறுப்பை தமிழிசை ஏற்ற சில மணி நேரத்தில், முதல்வர் நாராயணசாமி அரசு வரும் 22ஆம் தேதி பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்று அவரது மாளிகைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் நாராயணசாமியின் அரசு தொடர வேண்டுமானால், அதற்கு எதிரணியில் உள்ள சில உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது. இதேபோல, எதிரணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் அணி ஆட்சி அமைக்க உரிமை கோருமானால், அதுவும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி பக்கம் இருக்கும் சுயேச்சை உறுப்பினர் மற்றும் வேறு சில உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அந்த நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது.
இத்தகைய சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நிறைவுக்கு வரவுள்ளதால், அதற்கு தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிறது. எனவே, மாற்று அரசு அமைவதற்கான சூழல் எழாமல் போனால், புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்படும்வரை பேரவையை முடக்கி விட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமைவதற்கான சூழலே நிலவுவதாக அங்குள்ள அரசியல் சூழ்நிலை உணர்த்துகிறது.