புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பு: நாராயணசாமி அரசு தோல்வி; கலைகிறது காங்கிரஸ் அரசு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2021 (திங்கட்கிழமை)
இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.இதன் மூலம் புதுச்சேரியின் 14ஆவது சட்டப்பேரவை காலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து, தனது தலைமையிலான அரசின் அமைச்சர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
முன்னதாக, ஆளும் தரப்பின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் அடுத்தடுத்த பதவி விலகல்களைத் தொடர்ந்து, நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகிக்கும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் வலியுறுத்தினர்.
இதன்பின் 22ஆம் தேதிக்குள் (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென, பதிவியேற்ற முதல் நாளான பிப்ரவரி 18ஆம் தேதியே தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார்.
இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய பின்னர் ஆற்றிய உரையை தமது அரசின் சாதனைகளைப் பட்டியலிடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் நாராயணசாமி.
நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி தமது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், என்.ஆர். காங்கிரஸ் அரசு விட்டுச்சென்ற திட்டங்கள் தமது ஆட்சியில் தொடரப்பட்டது குறித்தும் பேசினார்.
துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி மூலம் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நரேந்திர மோதி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நாராயணசாமி. இந்திய ஒன்றிய அரசை விமர்சித்து நாராயணசாமி பேசியபோது எதிர்க் கட்சிகள் தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
நரேந்திர மோதி அரசின் பொருளாதார வளர்ச்சி -7% ஆக இந்திய அளவில் இருந்தபோது, புதுவை மாநிலத்தின் வளர்ச்சி 10.7% ஆக இருந்தது என்று கூறினார் நாராயணசாமி.
புதுவை மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை 1.99% எனும் விகிதம் 5% அளவுக்கு உள்ள பிற மாநிலங்களை மாநிலங்களைவிடவும் குறைவு என்றார். நிதி ஆணையத்தில் சேர்க்கப்படாமல் புதுவை மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் நாராயணசாமி கூறினார்.
இதுவரை நடந்தது என்ன ?
ஜூன் 10, 2020: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி புதுச்சேரி பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.
இதனால் 18ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்தது.
ஜனவரி 25, 2021: முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் போக்கு காரணமாக புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ஜனவரி 25ஆம் தேதி பதவி விலகினர்.
இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக குறைந்தது.
ஜனவரி 28 2021: நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் இருவரும் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பிப்ரவரி 15, 2021: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரி யானம் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதி பதவி விலகினார்.
பிப்ரவரி 16, 2021: கிருஷ்ணா ராவ் விலகிய அடுத்த நாளே பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜான்குமார் பதவி விலகினார்.
இதனிடையே பிப்ரவரி 16ஆம் தேதி இரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அந்த பதவிக்கு வேறொருவரை நியமிக்கும் வரை, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை பிப்ரவரி 16ஆம் தேதி இரவு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக குடியரசு தலைவர் ஒப்படைத்தார்.
பிப்ரவரி 17, 2020: ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி பிப்ரவரி 17ஆம் தேதி எதிர்க் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி துணை நிலை ஆளுநரின் தனி செயலரிடம் மனு அளித்தனர்.
இதே, பிப்ரவரி 17ஆம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி புதுச்சேரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 18, 2020: இதனைத் தொடர்ந்து 17ஆம் மாலை புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார். மேலும் அன்றைய தினமே எதிர்க்கட்சிகள் துணைநிலை ஆளுநரை சந்தித்து, காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என நேரடியாக வலியுறுத்தினர்.
இதனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 22ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென, பதிவியேற்ற முதல் நாளான பிப்ரவரி 18ஆம் தேதியே தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து நாராயணசாமி நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்களிக்கும் உரிமை கிடையாது என்றார். இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவரும், நியமன சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், உச்சநீதிமன்றம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது என வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கு பெறுவோம் என்றார்.
பிப்ரவரி 21, 2020: 22ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூடவிருந்த நிலையில், அதற்கு முதல் நாளான 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவி விலகினார். அடுத்த ஒரு மணி நேரத்தில், திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பதவி விலகினார்.
ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியில் அடுத்தடுத்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 11ஆக பலம் குறைந்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது முழு பெரும்பான்மையை இழந்தது. அன்று இரவு 7 மணிக்கு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.