கார் கடத்தல் பின்னணியில், ‘பர்மா’ படத்தை இயக்கிய தரணிதரன் இப்போது பீரியாட்டிக்கல் பேய் படத்தை இயக்கி வருகிறார். அது, சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கும் ‘ஜாக்சன் துரை’. பிந்து மாதவி ஹீரோயின். படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு டப்பிங் பணியில் பிசியாக இருந்தவரிடம் பேசியதிலிருந்து...
கட்டபொம்மன் கதையில் வரும் ஜாக்சன் துரைக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம் உண்டா?
ஒரே ஒரு சம்பந்தம் இருக்கு. கட்டபொம்மன் கதையும் சுதந்திர போராட்ட கதை. இந்தப் படத்தின் ஒரு பகுதியும் 1940-ல் நடக்கும் சுதந்திரபோராட்ட கதை. சுதந்திர போராட்ட வீரராகசத்யராஜ் நடிக்கிறார். அவர் எதிர்க்கும் வெள்ளைக்கார அதிகாரியின் பெயர்,ஜாக்சன் துரை.
சத்யராஜ் நாத்திகராச்சே, பேய் படத்தில் நடிக்க சம்மதித்தது எப்படி?
கொள்கை வேறு, சினிமா வேறு என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அவர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் முதல் காட்சியே அவர் சாமி கும்பிடுகிற காட்சிதான். அவரிடம் பேயாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் தயங்கினார். வழக்கமான பேய் படம் என்று கருதினார். கதை கேட்டபிறகுதான் இப்படியும் பேய் படம் எடுக்க முடியுமா என்று கேட்டு ஒப்புக் கொண்டார்.
சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி
காம்பினேஷன் எப்படி?
சத்யராஜும், சிபிராஜும் அப்பா மகன் இல்லை. அவர் பேய். இவர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர். இருவரும் சீரியசாக நடிப்பார்கள். பார்வையாளர்களுக்கு காமெடியாக இருக்குற மாதிரி காட்சி அமைப்புகள் இருக்கும். அமானுஷ்ய சக்தி பற்றி விசாரிக்க வருகிற போலீஸ் அதிகாரி சிபி. பிந்து மாதவி அந்த ஊர் பொண்ணு. லவ் போர்ஷன் பெரிதாக இல்லா விட்டாலும் சிபி, பிந்து காதல்தான் கதையின் டர்னிங் பாயின்ட்.
பேய் படம் என்றால் கிராபிக்ஸ் காட்சிகள்
இருக்குமே?
வழக்கமான பேய் படம் என்பதை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்திருக்கிறோம். பேய் படம் என்றாலும் இதிலும் கதை இருக்கிறது.
15 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்இருந்தாலும் எதுவும் துறுத்திக் கொண்டு தெரியாது. அகோரமான மேக்அப், ரத்தம், சத்தம் எதுவும் இருக்காது. ஆனால், இரண்டரை மணி நேர என்டர்டெயின்மென்டுக்கு உத்தரவாதம் இருக்கும்.
‘பர்மா’வை மேற்கத்திய பாணியில் ஸ்டைலாக இயக்கியிருந்தீர்கள். இதில்?
உண்மைதான். என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். மக்கள் பேய் படங்களை ரசிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த ஜானரில் ஏன் புது விஷயம் சொல்லக்கூடாதுன்னு தோணிச்சு. ‘ஜாக்சன் துரை’ உருவாச்சு. பேய் படம்தான்னு ஒதுக்கிதள்ளிட முடியாத அளவிற்கு ஸ்டிராங்காக ஒரு மெசேஜ் சொல்லியிருக்கோம்.
சத்யராஜ் கெட் அப் மிரட்டலாக இருக்கிறதே?
டீசர் பார்த்துட்டு நிறைய பேர் அப்படித்தான் சொன்னாங்க. இதுல அவருக்கு மொத்தம் 3 கெட்அப். நீண்ட தலைமுடி, தலையில் தலைப்பாகை என சுதந்திர போராட்ட தியாகியாக வருவார். பின் அவர் தலையை மொட்டை அடித்து ஆங்கிலேயர்கள்துன்புறுத்துவார்கள். அது ஒரு கெட்டப். அப்புறம் பேய் கெட்டப். மூன்று கெட்டப் களுமே அவருக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
காமெடி நடிகர்கள் இருக்கிறார்களா?
மொட்டை ராஜேந்திரனும் பேயாக வருகிறார். அவர் சத்யராஜுக்கு எதிரான பேய். இருவரும் மோதிக் கொள்ளும் இடங்கள் காமெடியாக இருக்கும். இதுதவிர
கருணாகரன் இருக்கிறார். இப்படி ஆளாளுக்கு காமெடி பண்ணிக் கொண்டிருக்க, அதற்கு நடுவில் அழகான கதையை கொண்டு செல்வதுதான் என்னுடைய வேலை. அது சவாலான வேலையும்கூட. அதை சரியாக செய்திருப்பதாக நம்புறேன்.