கடவுள் தன் அருகில் இருப்பதாக கூறுகிறார் பிரபல இந்தி நடிகை ஸ்ருதா கபூர். அவர் இப்படி சொல்வதற்கான வித்தியாசமான காரணத்தை அறிய தொடர்ந்து படியுங்கள்!
உங்கள் படங்கள் தொடர்ந்து வெற்றியடைய நீங்கள் தேர்ந்தெடுக்கும் ‘ஸ்கிரிப்ட்’தான் காரணம் என்று சொல்லப்படுவது சரியா?
‘ஸ்கிரிப்ட்’தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஏன்என்றால் சரியான ஸ்கிரிப்டை தேர்வு செய்வது என்பது கடினமான விஷயம். சில ஸ்கிரிப்ட் படிக்க நன்றாக இருக்கும். ஆனால் அதை படமாக்கும்போது சுவாரசியம் இருக்காது. ஒரு சில ஸ்கிரிப்ட் படிக்கும்போது திருப்தி தராது. ஆனால் அது வெற்றி பெறும் என்று என் உள்மனது சொல்லும். அதை நான் தேர்ந்தெடுத்துவிடுவேன். ஆனால் உள் மனது தேர்ந்தெடுக்கும் ஸ்கிரிப்ட்டுக்காக நாம் தேடி அலைந்துகொண்டிருக்க முடியாது.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், சில சமயம் ஸ்கிரிப்ட் என்னவென்றே தெரியாமல்கூட நடித்திருக்கிறேன். கதாபாத்திரத்திற்கு நாம் ஜீவன் கொடுத்தால் கதாபாத்திரம் நமக்கு வெற்றியைத் தரும்.
நான் படத்திற்கு படம் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதுபோல் நடிப்பிலும் படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புகிறேன். இயக்குநர் நம்மை இயக்கினாலும், நாமும் கொஞ்சம் நம்மை இயக்க கற்றுக்கொள்ளவேண்டும். வித்தியாசத்தை காட்டும்போதுதான் புதிய கதாபாத்திரம் உருவாகும்.
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
எனக்கு பிடிக்காத நடிகர் என்று யாரும் இல்லை. இதுவரை வருண் தவன், ஆதித்யா ராய் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து நடித் திருக்கிறேன். மூவரும் சிறப்பாக நடிக்க கூடியவர்கள்.
நீங்கள் எந்த பிரபல நடிகர்களோடு இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள்?
ரித்திக்ரோஷன் மற்றும் மூன்று கான் நடிகர்களோடும் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். அவர்களோடு சேர்ந்து நடிக்கும்போது நமது அந்தஸ்து உயர்ந்துவிடும்.
நீங்கள் கடவுளிடம் வேண்டுவது?
நல்ல மனது. நாம் மன மாசுபட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால் தூய எண்ணங்கள் வருவது ரொம்ப கஷ்டம். தூய எண்ணங்கள் நம் ஆன்மாவை இறைவன் வசப்படுத்தும். இறைவனுக்கு அருகில் இருக்கும் ஆன்மா எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
உங்களுக்கு பிடித்த நிறம்?
சிவப்பு. உற்சாகத்தை தூண்டும் நிறம். நெருப்பு மற்றும் காதல், புரட்சியின் அடையாளம் சிவப்பு.
இறைவன் உங்கள் அருகில் இருப்பதை உணர்கிறீர்களா?
என் எண்ணங்கள் எளிதாக ஈடேறும்போது இறைவன் என் அருகில் இருப்பதை உணர்கிறேன். நான் என் பெற்றோரோடு சேர்ந்து ‘ராக் ஆன்’ சினிமா பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்து ‘ராக் ஆன்–2’ படம் எடுத்தால், அதில் நான் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறிவிட்டது. அதுபோல் நிறைய சம்பவங்கள் மூலம் கடவுள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்
உங்களுக்கு பிடித்த டைரக்டர் யார்?
சஞ்சய் லீலா பன்சாலி எனக்கு பிடித்த டைரக்டர். அவர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதையும் இறைவன் நிறைவேற்றி வைப்பார்.
நீங்களும் பாடி, நடிக்க ஆரம்பித்து விட்டீர்களே?
ஆமாம். ‘ராக் ஆன்–2’ வில் பாடகியாக நடிக்கிறேன். அதற்காக சொந்தக் குரலில் பாடியிருக்கிறேன். இதன் மூலம் என் கூடுதல் திறமையை வெளிக்காட்டியிருக்கிறேன். இது எனது மனதுக்கு புதிய உற்சாகத்தை தந்திருக்கிறது.
நீங்கள் திட்டம்போட்டு உழைத்து வெற்றியடைந்து கொண்டிருக்கிறீர்களா?
இல்லை! திட்டம்போட்டு எதையும் சாதிக்க முடியாது. வாழ்க்கை நீரோட்டத்தில் நாம் போடும் திட்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். உழைப்பு மட்டுமே நம்முடைய சொத்து. அதில் உறுதியாக இருந்தால் முன்னேற்றம் தானே வரும்.