ரியோ ஒலிம்பிக்கில் பெற்ற வெள்ளிப் பதக்கத்தை விற்று புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவிய போலந்து வீரர்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2016 (வெள்ளிக்கிழமை)
போலந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்காக ரியோ ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை விற்று உதவிய போலந்து தடகள வீரரின் மனிதாபிமானத்தை பாராட்டி டுவிட்டரில் பாராட்டுகள் குவிகின்றன.
போலந்து நாட்டை சேர்ந்த 33 வயதான பயோர் மாலசோவ்ஸ்கி ரியோ ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் பயோர் மாலசோவ்ஸ்கி -க்கு 3 வயது குழந்தை ஒன்றின் தாயார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமது மகன் கண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயோர், தமது வெள்ளிப்பதக்கத்தை விற்று, குழந்தையின் மருத்துச் சிகிச்சைக்கு உதவியுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள அவர், ரியோ ஒலிம்பிக்-கில் தங்கம் வென்றிருந்தால் கூட, இவ்வளவு பெருமை கிடைத்திருக்காது என்றும், சிறுவனின் மருத்துவத்திற்கு உதவியது பெரும் மனநிறைவை கொடுத்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை விற்று உதவிய தடகள வீரரின் மனிதாபிமானத்தை பாராட்டி டுவிட்டரில் பாராட்டுகள் குவிகின்றன.