கான்பூரில் இன்று தொடங்குகிறது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2016 (புதன்கிழமை)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு இது 500வது டெஸ்ட் போட்டியாகும். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று தொடங்குகிறது. நடப்பு சீசனில், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்தியா, ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் களம் காண்கிறது.இந்தியாவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க 500வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையில் உற்சாகமாக களமிறங்கும் இந்தியா, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்வின், மிஷ்ரா, ஜடேஜா சுழல் கூட்டணியை சமாளிப்பது நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.
சிக்குன்குனியாவால் அவதிப்பட்டு வரும் இஷாந்த்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் உமேஷ், புவனேஷ்வர், ஷமி ஆகியோரில் இருந்து இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தொடக்க வீரர்களாக களமிறங்குவதில் தவான், ராகுல், விஜய் இடையே போட்டி நிலவுகிறது. நடுவரிசையில் இடம் பிடிக்க ரோகித், ரகானே போராடுகின்றனர். துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் விளாசிய புஜாரா இடம் பெறுவது உறுதி. மும்பை அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் திணறியதால் நியூசிலாந்து அணி சற்று தடுமாற்றத்துடனேயே உள்ளது. ஆல் ரவுண்டர் நீஷாம் காயம் அடைந்ததும் அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். கேப்டன் வில்லியம்சன், கப்தில், டெய்லர் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்குதல் கொடுக்க முடியும். ஈஷ் சோதி, சான்ட்னர் இருவரும் சுழற்பந்துவீச்சுக்கு பொறுப்பேற்கின்றனர்.
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், இந்த போட்டி முழுமையாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. மழை பாதிப்பு இல்லாவிட்டால், விறுவிறுப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, செதேஷ்வர் புஜாரா, விருத்திமான் சாஹா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அமித் மிஷ்ரா, ஆர்.அஷ்வின், உமேஷ் யாதவ். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், மார்க் கிரெய்க், மார்டின் கப்தில், மேத்யூ ஹென்றி, டாம் லதாம், ஜேம்ஸ் நீஷாம், ஹென்றி நிகோல்ஸ், லூக் ரோன்கி, மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், பி.ஜே.வாட்லிங்.