கொல்கத்தா: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் 178 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் செப். 30ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 316 ரன் குவித்தது. நியூசிலாந்து 204 ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 112 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்திருந்தது. சாஹா 39 ரன், புவனேஷ்வர் 8 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். புவனேஷ்வர் 23 ரன் எடுத்து வேக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷமி 1 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் லதாம் வசம் பிடிபட, இந்தியா 2வது இன்னிங்சில் 263 ரன்னுக்கு (76.5 ஓவர்) ஆல் அவுட்டானது. பொறுப்புடன் விளையாடிய சாஹா 58 ரன்னுடன் (120 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், ஹென்றி, சான்ட்னர் தலா 3, வேக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 376 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. லதாம், கப்தில் இருவரும் துரத்தலை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தனர். கப்தில் 24 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் வெளியேறினார். அடுத்து லதாம் - நிகோல்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தனர். நிகோல்ஸ் 24 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஆட்டமிழக்க, கேப்டன் ராஸ் டெய்லர் 4 ரன் மட்டுமே எடுத்து அஷ்வின் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். உறுதியுடன் போராடிய லதாம் 74 ரன் விளாசி (148 பந்து, 8 பவுண்டரி) அஷ்வின் பந்துவீச்சில் சாஹாவிடம் பிடிபட, ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.
ஓரளவு தாக்குப்பிடித்த லூக் ரோங்கி 32 ரன், ஹென்றி 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (81.1 ஓவர்). வேக்னர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 178 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இரண்டு இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் சாஹா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன.
2 இன்னிங்சிலும் 50+ டோனி, பரூக் இன்ஜினியர், திலவார் உசேன் ஆகியோரை தொடர்ந்து, ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் அரை சதம் விளாசிய 4வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை சாஹாவுக்கு கிடைத்துள்ளது. டோனி மட்டும் 4 முறை இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.