தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடைசெய்யப்பட்டதுடன், அந்த போட்டிக்கான ஊதியத்தை அபராதமாக செலுத்தவும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த போட்டிகளில் எஞ்சியுள்ள நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர்.
ஆஸ்திரேலியா - தென் ஆஃபிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள நாட்களில் டிம் பைன் கேப்டனாக இருப்பார். எனினும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் போட்டியில் விளையாடுவார்கள்.
வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அரசின் அமைப்பான ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தை முன்னே அறிந்து வைத்திருந்த யாராக இருந்தாலும், தலைமைக்குழு உறுப்பினர்கள் அல்லது பயிற்சி ஊழியர்களாக இருந்தாலும், ஸ்மித்துடன் சேர்ந்து அவர்களும் பதவி விலக வேண்டும் என்று விளையாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது.
இச்சம்பவம் அதிர்ச்சியாகவும், மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் தாம் பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என பேன்கிராஃப்ட் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், 'பேன்கிராஃப்ட்டின் இத்திட்டம் குறித்து தமக்கு முன்பே தெரியும்' என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
இது தொடர்பான தகவல்களை சேகரிக்க, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் இரண்டு மூத்த அதிகாரிகள் தென் ஆஃபிரிக்கா பயணிக்கின்றனர்.
ஸ்டீவ், கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்த சதர்லான்ட், "என்ன நடந்தது என்று தெளிவாக தெரிய வந்த பிறகுதான் எதுவும் கூற முடியும்" என்று தெரிவித்தார்.
பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டதை நம்ப முடியவில்லை - ஆஸ்திரேலிய பிரதமர்
தென் ஆஃபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலிய அணி குறித்து வந்த செய்தி அதிர்ச்சி மற்றும் மிகுந்த வருந்தத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலியாவின் பிரதமர் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஸ்திரேலிய அணி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன் மாதிரியாக திகழ்பவர்கள். எப்படி எங்கள் அணி மோசடி செய்யமுடியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே, "கேப் டவுன் போட்டியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டால், கேப்டன் ஸ்மித்தும் பயிற்சியாளர் டேரன் லேமானும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Very disappointed with the pictures I saw on our coverage here in Cape Town. If proven the alleged ball tampering is what we all think it is - then I hope Steve Smith (Captain) & Darren Lehmann (Coach) do the press conference to clean this mess up !
Surely, ICC will react under the laws of the game. But the World will be eagerly waiting for Cricket Australia to react appropriately...under the ethics of the game.