மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பான்கிராஃப்ட்! - வைரலாகும் வீடியோ
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2018 (திங்கட்கிழமை)
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தின், மூன்றாவது நாளில் ஆஸி. அணியைச் சேர்ந்த கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் மூலம் அவர் செய்த தவறு நிரூபிக்கப்பட்ட நிலையில், ஆஸி. அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்தக் குற்றத்திற்காக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னரும் விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டீவன் ஸ்மித், பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவேண்டும் என்பதற்காக நான்தான் பான்கிராஃப்டை பந்தை சேதப்படுத்துமாறு பணித்தேன் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கம் சிறிதும் குறைந்திடாத சூழலில், தற்போது சர்ச்சையைக் கிளப்பும் புதிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்ற வருடம் சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான ஆஸஸ் கிரிக்கெட் தொடரின்போது, ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த கேமரூன் பான்கிராஃப்ட், அங்கிருக்கும் சர்க்கரையை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சர்க்கரையைப் பயன்படுத்தி பந்தைத் தேய்த்து ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வைக்கலாம் என்பதே பலரின் வாதமாக இருக்கிறது. நடந்து முடிந்த ஆஸஸ் தொடரில் ஆஸி. பவுலர்கள் அசாதாரணமாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தது அப்போது பலரை ஆச்சர்யப்படுத்தினாலும், இப்போது அதன் மீதான சந்தேகங்களை கிளப்பி விட்டிருக்கிறது இந்த வைரல் வீடியோ.