முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2018 (வெள்ளிக்கிழமை)
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல லட்சம் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது இறுதி பேரவலம் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.இன்றைய தினம் காலை 11 மணிக்கு பிரதான சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டஇந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு கிழக்கினை சேர்ந்த ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது ஆத்மாத்தமான அஞ்சலிகளை செலுத்தியிருந்தார்கள்.
வடக்கு மாகாண சபையும், யாழ்.பல்கலைகழகமும் சிவில் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து இவ் அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த்து.
குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் அனைவரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் நினைவஞ்சலியில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களில் இருந்தும் ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றியிருந்தனர்.
அஞ்சலி நிகழ்வானது முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் சூழ்ந்து நிற்க ஆரம்பமானது.
முற்பகல் 11 மணியளவில் பிரதான சுடரானது ஏற்றப்பட்டது. இறுதி போரில் தனது தாய் தந்தைகளை இழந்து தற்போது உறவினர்களோடு வசித்து வரும் யுவதியொருவரே பிரதான நினைவுச் சுடரை ஏற்றிவைத்தார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன் பிரதான சுடரினை எடுத்துகொடுக்க அவ் யுவதி பிரதான சுடரினை ஏற்றிவைத்தார்.அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதையடுத்து நினைவு மைதானத்தில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நினைவுச்சுடர்களும் மக்களால் ஏற்றப்பட்டன.
இவ் நினைவஞ்சலியின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைத்து மக்கள் கதறியழுதனர்.
நினைவஞ்சலியை தொடர்ந்து இம் மே 18 ஆம் திகதி துக்க தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுஸ்டிக்க வேண்டும் என்றும், சர்வதே சமூகமானது விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான விசாரனை பொறிமுறை ஒன்றை உருவாக்கி நீதியை கால தாமதம் இன்றி நிலைநாட்ட வேண்டும் என்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கிய உரையினை முதலமைச்சர் ஆற்றியிருந்தார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைமைகள் எவரையும் நினைவஞ்சலி ஏற்பாட்டு குழுவானது முதன்மைப்படுத்தியிருக்கவில்லை. வடக்கு மாகாண முதலமைச்சரை மாத்திரமே பிரதான நினைவு சுடர் ஏற்றும் இடத்திற்கு அனுமதித்திருந்தனர்.
குறிப்பாக அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன்,ஈஸ்வரபாதம் சரவணபவன்,சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி்.கே.சிவஞானம் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறு அரசியல் தலைமைகள் கலந்துகொண்டிருந்த போதும் அவர்கள் எவரையும் நினைவிடத்திற்கு அண்மையில் அஞ்சலி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவடைந்த உடனேயே அனைத்து அரசியல் உறுப்பினர்களும் மக்களோடு மக்களாக அஞ்சலி நிகழ்வில் கலந்துவிட்டு உடனடியாகவே அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.